விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

பானமாளி தாஸ் - ஒரு ஒருங்கிணைந்த விவசாயி

மேற்கு வங்காளம், தெற்கு 24 பர்கானாஸ் காயதம் கிராமத்தில் வசிப்பவர், பானமாளி தாஸ். அவருடைய ஒருங்கிணைந்த பண்ணையத்தில் 5 உறுப்பினர்களைக் கொண்டுள்ளார். ஒரு குட்டை மற்றும் சிறிய வீட்டுத்தோட்டத்துடன் கூடிய 0.25 ஏக்கர் நிலம், 0.33 ஏக்கர் வயல் சார்ந்த நிலம் ஆகியவற்றில் ஒருங்கிணைந்த பண்ணையத்தை பானமாளிதாஸ் தொடங்கினார்.

இந்த நிலங்கள் சுந்தர்பன் டெல்டா பிரதேசத்தில் அமைந்துள்ளன. களிவாகு மண், உவர் தன்மையும் கொண்டது. ஆற்றோரம் இவருடைய நிலமிருப்பதால், அவ்வப்போது தண்ணீர் தேங்கும். காரிஃப் பருவத்தில் வயலில் நெல் சாகுபடியும், ரபி பருவத்தில் உருளை, லத்தைரஸ் (அவரை வகை), சாகுபடியும் மேற்கொள்வார். வீட்டைச் சுற்றியுள்ள தோட்டத்தில், காய்கறி பயிர்கள், கீரைவகைகள், பழமரப் பயிர்களை சாகுபடி செய்துள்ளார். இதனால் இவர் மார்க்கெட் செல்வது குறையவில்லை. குட்டையில் மீனும் வளர்க்கிறார். ஆனால் இதன் மூலம் அதிக வருமானம் கிடைக்கவில்லை. மண்வளத்திற்காக சாணி, குப்பை, போன்றவற்றை பயன்படுத்துகிறார்.

கையாண்ட யுக்திகள்

நிலத்தின் ஒரு மூலையில் சிறிய குளம் வெட்டினார். கிடைத்த மண்ணை, பரிசோதனை நிலத்தில் பரப்பி, உயரத்தை அதிகரித்தார். வயலைச்சுற்றிலும் சிறிய வாய்க்கால் அமைத்து வருடம் முழுவதும் பாசனம் கிடைக்க வழி செய்துள்ளார். நிலத்தின் பெரிய வரப்புகளில் உயரமான மரங்கள் உள்ளன.

தைலமரம், வேம்பு, சூபாபுல், தூங்கு மூஞ்சி மரம், மூங்கில் போன்றவை உள்ளன. வீட்டுத்தோட்டத்தில் வாழை, கொய்யா, சப்போட்டா, பேரிக்காய், எலுமிச்சை, மா, தென்னை போன்ற பயன்தரும் பயிர்கள் வளர்க்கப்படுகின்றன. வருடம் முழுவதும் 25-30 காய்கறி பயிர் வகைகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து பலமுறைகளில் சாகுபடி மேற்கொள்கிறார். தாஸ் அவரது வீட்டின் பின்புறம் புதிதாக சாண எரிவாயுக்கலன் ஒன்றை அமைத்துள்ளார். அதிலிருந்து அவருக்கு எரிவாயுவும், மக்கியசாணி, எருவும் கிடைக்கின்றன.

பானமாளி தாஸ், பசு, வாத்து, கோழி போன்ற கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். ஒருங்கிணைந்த பண்ணையாக, நெல்வயல், மீன், வாத்து, அசோலா ஆகியவற்றை காரிஃப் பருவத்தில் மேற்கொள்கிறார். அவருடைய பரிசோதனைத் நிலத்தில் எவ்வித ரசாயன கலப்பும் கிடையாது. குளத்தில் ரோகு, கட்லா, மிர்கால், புல்கெண்டை போன்ற மீன் இனங்களை வளர்த்து, ஒரளவிற்கு லாபமும் பார்க்கிறார்.

மீனுக்கு உணவாக, கால்நடைத் தீவன கழிவுகள், பண்ணைக்கழிவு, சாணி, எள்புண்ணாக்கு ஆகியவற்றை போடுகிறார். 5 பசுக்கள், 8 வாத்துகுஞ்சுகள், 4 கோழிகள் மற்றும் 14 கோழிக் குஞ்சுகள் அவரிடம் உள்ளன.வைக்கோல், புல், பயிர்க் கழிவுகள் தீவனமாக உபயோகப்படுத்தப்படுகின்றன. அரிசிக் குருணைகள், தவிடு, நெல்கழிவுகள் குளத்திலிருந்து கிடைக்கும் சிறிய நத்தைகள், கோழிகளுக்கும், வாத்துகளுக்கும் உணவாகின்றன.

தாஸ் சொந்தமான மண்புழு உரம், கம்போஸ்ட்உரம் ஆகியவற்றை தயார் செய்கிறார். எள்புண்ணாக்கு, சாண எரிவாயுக் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்துகிறார். வேம்பு சார்ந்த பொருட்கள், பூண்டை மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தி பூச்சி விரட்டி பயன்படுத்துகிறார். முந்தைய பருவத்தில் சாகுபடி செய்த பயிர்களிலிருந்து அடுத்த பருவத்திற்கு தேவையான விதைகளை சேமித்து வைத்துக் கொள்கிறார். பருவகால பணப்பயிர்களான, நூல்கோல், கோஸ், காலிஃப்ளவர், போன்றவற்றின் விதைகளை மட்டும் வெளியில் வாங்கிக் கொள்கிறார்.

ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்கு பிறகு அவரிடமிருக்கும் விதைகளையும் மாற்றிக் கொள்கிறார். தாஸ் அவர்களுடைய பரிசோதனை நிலத்திலும், வீட்டுத்தோட்டமும் நல்லமுறையில் பராமரிக்கப்படுகின்றன. கலப்பு பண்ணையம் அதாவது கத்தரியுடன், முள்ளங்கி, பாலக் கீரை, உருளையுடன் பரங்கி, வெங்காயத்துடன் பசீல்லா ஆகியவற்றை சாகுபடி செய்துவருகிறார். மண்புழு தயாரிப்புக்கூடம் வைத்திருப்பதால், அதிலிருந்து கிடைக்கும் மண்புழு உரத்தை தனது வயலுக்கும், தோட்டத்துக்கும் பயன்படுத்திக் கொள்கிறார். அவர் வளர்க்கும் வாத்துகளை நெல்வயலில் மேயவிடுகிறார். இதன்மூலம் நெற்பயிர் வேர்களுக்கிடையே காற்றோட்டம் ஏற்படுகிறது. கோழிகள் பூச்சிகளை, புழுக்களை தோட்டத்திலிருந்து பொறுக்கி சாப்பிடுகின்றன. நெல்வயலில் தண்ணீர் நிற்கும்போது மீன் குஞ்சுகளை அதில் விட்டு வளர்க்கிறார் தாஸ்.

காரிஃப் 2004 ல் ஒரு பயிர் சாகுபடி செய்த தாஸ், காரிஃப் 2005 ல், 9 பயிர்கள் சாகுபடி செய்கிறார். குளத்தின் மேல் இருக்குமாரு கோழிக்கூண்டுகளை வைத்துவிட்டார். கோழி எச்சங்கள் குளத்தில் விழுந்து, மீன்களுக்கு உணவாகின்றது. மேலும் கோழிக்கழிவுகள் குளத்திலுள்ள பாசிகள், மற்றும் பிற உயிரினங்களுக்கும் உணவாகி, அவை வளர உதவுகிறது.

குளக்கரையில் கீரை வகை காய்கறிகளை வளர்க்கின்றார். தாஸ் செய்துள்ள மொத்த செலவான ரூ.12,235.75 (சொந்த வேலையாட்கள் கூலி இல்லாமல்), தன் வயலில் தயாரிக்கப்பட்ட சொந்த இடுபொருட்களின் மதிப்பு, ரூ.9497.75. அதாவது, மொத்த இடுபொருள் தேவையில் சுமார் 77.62% அவர் பண்ணைக் கழிவுகளிலிருந்தே கிடைத்திருக்கிறது. கடந்த சில வருடங்களில் அவரது நிலத்தின் அங்கக் கரிமத்தின் அளவு அதிகரித்திருக்கிறது. பானமாளி தாஸ் அவர்களது வயல், மற்ற தோட்டங்களோடு ஒப்பிடும் போது, பெட்ரோல் போன்ற எரிபொருள் தேவை மிகவும் குறைவே. காரணம் முழுக்க அவர் இயற்கை இடுபொருட்கள், அவரது தோட்டத்தில் கிடைத்தவற்றையே பயன்படுத்தியுள்ளது தான். பயிர்சாகுபடிக்கும், அவரது தோட்டத்தில் உள்ள வேலைக்கும், அவருடைய சொந்த வேலையாட்களே பயன்படுத்தப் பட்டதால், வேலைகளும் விரைவாக, காலத்தே செய்யப்பட்டுள்ளன. தாஸ் சரியாக திட்டமிட்டு, அவரது பண்ணை வேலைகள் அனைத்தும் தாமதமில்லாமல் வேகமாக நடக்கும் வகையில் பார்த்துக்கொண்டார். இன்று பானமாளி தாஸ், தன்னுடைய பண்ணையை தானே பராமரித்துக்கொள்வதோடு, சமூக பொருளாதார அளவிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் முதன்மையாகத் திகழ்கிறார். இவரது பண்ணையை பார்வையிட்ட பலரும், இப்போது ஒருங்கிணைந்த பண்ணையத்திற்கு மாறி வருகின்றனர். பானமாளி தனது சொந்த இடுபொருட்களை பயன்படுத்தி, வெளியிடத்து பொருட்களை நிறுத்தி இருக்கிறார். தனது விளைபொருட்களை விற்பனை செய்ததன்மூலம் வருமானமும் பார்க்கிறார். தனது குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்கிறார்.

ஒருங்கிணைந்த பண்ணையத்தில், இயற்கை வேளாண்மை நுட்பங்களையும் சேர்த்து கடைபிடிப்பதால், அதிகவிளைச்சல் கிடைத்து, அவரது குடும்பத்திற்கு உணவு பாதுகாப்பு கிடைத்திருக்கிறது. ஒருங்கிணைந்த பண்ணையமாக மாற்றி இருப்பதால் பண்ணைக்குத் தேவைப்படும் இடுபொருட்களுக்காக வெளியிடத்துக்கு செல்வதை தடுத்திருக்கிறார். அவருடைய பண்ணையில் கிடைக்கும் கழிவுகளையே இயற்கை உரமாக மாற்றி பயன்படுத்தி இருக்கிறார்.

மூலம் :DRCSC, கொல்கத்தா
நன்றி: indg.inகுறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்