அதிக மகசூலுக்கு மண் பரிசோதனை வேளாண் அதிகாரி அறிவுரை
பிற்பகல் 11:01 அதிக மகசூலுக்கு மண் பரிசோதனை வேளாண் அதிகாரி அறிவுரை 0 கருத்துகள் Admin
நாமக்கல்: "விவசாயிகள், தங்களது மகசூல் அதிகரிக்க மண் பரிசோதனை செய்து, மண் வளம் அறிந்து அதற்கேற்ப சாகுபடி செய்து பயன்பெறலாம்' என, வேளாண் இணை இயக்குனர் துரை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பயிர் வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையாக மண் வளமும், நீர்வளமும் அமைகின்றன. மண் வளத்தை அறிந்து அதை பராமரிக்க மண் ஆய்வு செய்தல் மிகவும் முக்கியம்.
மண்ணில் கலந்துள்ள சத்துக்களின் அளவு வயலுக்கு வயல் மாறுபடுவதாலும், பயிருக்கு பயிர் தேவைப்படும் சத்துக்களின் அளவு மாறுபடுவதாலும் மண் ஆய்வின் மூலமே பயிருக்கு ஏற்ற மிகச்சரியான உர சிபாரிசு வழங்க முடியும். அதன் மூலம் அதிகமாக உரமிடுவதையும், அதனால் உண்டாகும் அதிகப்படியான செலவையும் குறைக்க முடியும். களர், உவர், அமில நிலங்களை அறிந்து அவற்றை சீர்திருத்தம் செய்யவும் முடியும். மண் மாதிரி சேகரிக்கும் போது எரு குவித்த இடங்கள், வரப்பு ஓரம், மரங்களின் நிழல் விழும் இடங்கள், நீர் தேங்கியுள்ள இடங்களை தவிர்க்க வேண்டும். நெல், ராகி, சோளம் போன்ற குட்டை வேர்கள் உள்ள பயிர்களுக்கு அரை அடி ஆழத்திலும், பருத்து, மிளகாய், கரும்பு, மரவள்ளி போன்ற ஆழமான வேர் பயிர்களுக்கு முக்கால் அடி ஆழத்திலும் மண் மாதிரி எடுக்க வேண்டும்.
மா, தென்னை போன்ற பழவகை மரங்களுக்கு 3 அடி குழி தோண்டி அதில் ஒவ்வொரு அடிக்கும் தனித்தனியாக ஒரு மண் மாதிரி எடுக்க வேண்டும். மண் பரிசோதனை செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் மண் மாதிரியுடன் விவசாயி பெயர், சர்வே எண், சாகுபடி செய்யப்போகும் பயிர் போன்ற விபரங்களுடன் எருமப்பட்டி, நாமக்கல், சேந்தமங்கலம், புதுச்சத்திரம், ராசிபுரம், வெண்ணந்தூர், கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை வட்டார விவசாயிகள் நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள மண் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்ப வேண்டும். மோகனூர், பரமத்தி, திருச்செங்கோடு, பள்ளிபாளையம், எலச்சிபாளையம், மல்லசமுத்திரம், கபிலர்மலை வட்டார விவசாயிகள், நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள நடமாடும் மண் பரிசோனை நிலையம் அனுப்பி மண் பரிசோதனை செய்து, மண்வள அட்டைகளை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: அதிக மகசூலுக்கு மண் பரிசோதனை வேளாண் அதிகாரி அறிவுரை
பகிர்தல் மிக எளிமையானது,அழகானதுஇதனைச் சார்ந்த பதிவுகள்
0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..
உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்
விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...