காம்பவுண்ட் கட்டி விவசாயம் : பாரம்பரியத்தைக் காப்பாற்றும் விவசாயி
பிற்பகல் 11:53 காம்பவுண்ட் கட்டி விவசாயம் : பாரம்பரியத்தைக் காப்பாற்றும் விவசாயி 0 கருத்துகள் Admin
திருச்சி மாநகரில் குடியிருப்பு பகுதிக்கு நடுவில் 2.4 ஏக்கர் பரப்பில் கம்பவுண்ட் சுவர் எழுப்பி விவசாயம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார் நவீன விவசாயி ஒருவர்.
திருச்சியிலிருந்து வயலூர் செல்லும் சாலையில் ஒரு கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது சீனிவாசநகர். அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் நிறைந்த இப்பகுதி மெயின் ரோடின் ஓரத்தில் 2.4 ஏக்கர் பரப்பளவில், சதுர வடிவிலான கம்புவுண்ட் சுவர் கட்டிய நிலப்பகுதியில் பச்சை பாய் விரித்தது போல நெற்பயிர்கள் செழித்து வளர்ந்து நிற்கின்றன. கிராமப்புறங்களில் வயல்காடுகளைக் கூட மனைகளாக பிரித்து விற்பனை செய்துவரும் இந்த காலத்தில் நகரின் மையப்பகுதியில் பரபரப்பான போக்குவரத்து நிறைந்த பகுதியில் 28 ஆண்டாக முறையே இரண்டு போக நெற்பயிர் சாகுபடி சிறப்பாக நடந்து வருகிறது. வயலூர் சாலையில் செல்வோரை சீனிவாச நகரில் அமைந்துள்ள இந்த நிலம் திரும்பிப் பார்க்க வைக்கத் தவறுவதில்லை.
பல கோடி மதிப்புள்ள இந்நிலத்தை அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட வணிகத் தேவைகளுக்காக வாங்கிவிட வேண்டுமென அதன் உரிமையாளர் ஸ்ரீனிவாசனை நாள்தோறும் ஏதாவது பெரும்புள்ளிகள் முட்டி மோதி ஏமாற்றத்துடனே திரும்புகின்றனர். ஸ்ரீனிவாசனோ 70 வயதை கடந்தும், "நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தின் மீதுள்ள ஆர்வத்துடன், நிலத்தை விற்க வேண்டிய தேவை இல்லை' என்கிறார் கறாராக. லாப நோக்குடன் இல்லாவிட்டாலும், பாரம்பரியமாக செய்த விவசாயத்தை விடாமல் தொடர வேண்டும் என்பதே அவரது லட்சியம்.
ஸ்ரீனிவாசன் மேலும் கூறியதாவது: கடந்த 1981ம் ஆண்டு சீனிவாசநகரில் 2.4 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். வாங்கியது முதல் இதுநாள் வரை விவசாயம் தான் செய்கிறேன். ஆண்டுக்கு குறுவை, சம்பா இரண்டு போக சாகுபடி நடக்கிறது. ஒரு போகத்துக்கு ஏக்கருக்கு தலா 11 ஆயிரம் ரூபாய் வீதம் செலவாகிறது. அறுவடையில் ஏக்கருக்கு தலா 61 கிலோ எடையுள்ள 40 நெல் மூட்டைகள் கிடைக்கிறது. இதன்மூலம் ஏக்கருக்கு 40 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கும். செலவு போக 28 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். சம்பா, குறுவைக்கு இடைபட்ட ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் உளுந்து, எள் போன்ற பயிர்களை சாகுபடி செய்வோம். நகரின் மையப்பகுதியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் விவசாய நிலம் அமைந்துள்ளதால், நிலத்தை பலரும் விலைக்கு கேட்டு வந்துள்ளனர். என் லட்சியம் விவசாயத்தை விடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது தான். நிலத்தை விற்க வேண்டிய தேவையும் எனக்கு இல்லை. எனவே, நிலத்தை கேட்டு வருபவர்களிடம் அதுபற்றி பேசுவதில்லை.
இதேபோல், மாநகரப் பகுதியிலேயே வயலூர் ரோடு ஆனந்தம் நகர் அருகில் 15 ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்கிறோம். எனக்கு மூன்று மகன்கள் உள்ளனர். என் பெயரில் மட்டும் நிலமிருந்தால் தானே பிரச்னை வரும் என்பதால், மகன்கள் உள்ளிட்டோர் பெயரில் பாகப்பிரிவினை எழுதியுள்ளேன். நிலத்தில் வரும் நெல் அரவைக்காக ரைஸ் மில்லும், மாவு மில்லும் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடையும் வைத்துள்ளோம். இவற்றை மகன்கள் நிர்வகிக்கின்றனர். மகன்களும் என்னைப் போன்றே விவசாயம் செய்யவே விரும்புகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

குறிச்சொற்கள்: காம்பவுண்ட் கட்டி விவசாயம் : பாரம்பரியத்தைக் காப்பாற்றும் விவசாயி
பகிர்தல் மிக எளிமையானது,அழகானதுஇதனைச் சார்ந்த பதிவுகள்
0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..
உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்
விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...