விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

நெற்பழ நோயால் சம்பா பயிர் பாதிப்பு கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு யோசனை

திருவாரூர்:சம்பா, தாளடி நெற்பயிரில் நெற்பழம் நோயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு திருவாரூர் வேளாண் இணை இயக்குனர் அன்பழகன் யோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பூக்கும் தருணத்தில் உள்ள சம்பா, தாளடி நெற்பயிரில் குறிப்பாக பி.பி.டி.5204 ரகத்தில் தற்போது நிலவும் காலநிலை காரணமாக நெற்பழம் என்று சொல்லப்படும் கரிப்பூட்டை என்ற பூஞ்சாண நோய் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.


காற்றில் ஈரப்பதம் 92 சதவீதத்திற்கு அதிகமாக இருப்பதாலும், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகளவில் யூரியா மேலுரம் இடுவதாலும், குறைந்த வெப்பநிலை மற்றும் பூக்கும் தருணத்தில் தொடர்ந்து மழை தூறல் மற்றும் அதிக மழை பெய்யும் சூழ்நிலை ஏற்பட்டாலும் இந்த நோய் தாக்கும்.கரிப்பூட்டை நோய் பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள் நெற்மணிகள் முதிரும் போது தான் தோன்றும். ஒவ்வொரு மணியிலும் பூசணத்தின் வித்துக்கள் நிரம்பியிருக்கும்.


நெல் மணியின் வெளிப்பகுதி பச்சையாகவும், பூஞ்சாண வித்துக்கள் கொண்ட உட்பகுதி மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும். ஒரு கதிரில் ஒரு சில மணிகளே இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கும். காற்றடிக்கும் போது பூஞ்சாண வித்துக்கள் பாதிக்கப்பட்ட மணியில் இருந்து இதர பயிர்களுக்கு பரவுகின்றன. இந்நோய் நெற்பயிரை தாக்குவதால் நெல்மணிகள் பதராகி விடும். இதனால் 10 முதல் 60 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.


தொண்டை கதிர் நிலையிலும் மற்றும் 50 சதவீத பூக்கும் நிலையிலும் புரப்பிகோ னோசோல் என்ற பூஞ்சாண கொல்லி மருந்தை ஏக்கருக்கு 200 மிலி அல்லது கார்பன்டாசிம் 200 கிராம் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். கரிப்பூட்டை நோய் தாக்கப்பட்ட வயலில் விளைந்த நெல்லை அடுத்த பருவ சாகுபடிக்கு விதையாக பயன்படுத்தக் கூடாது.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...