சேலத்தில் மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலை: குஜராத் அதிகாரிகள் உறுதி சுற்றுப்பயணம் மேற்கொண்ட தொழிலதிபர்கள் தகவல்
பிற்பகல் 7:01
சேலத்தில் மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலை
Admin
சேலம், டிச.14: சேலம் மாவட்டத்தில் மாம்பழம், தக்காளி மற்றும் மல்லிகைப் பூ போன்றவற்றை பதப்படுத்தும் சிறு தொழிற்சாலைகள் அமைக்க அனைத்து உதவிகளும் செய்து தருவதாக குஜராத் மாநில அரசு உயர் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.குஜராத் மாநில தலைமைச் செயலர் டி.ராஜகோபால் அழைப்பின் பேரில், சேலம் மாவட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் சங்கத்தைச் சேர்ந்த 20 தொழிலதிபர்கள் குஜராத்துக்கு தொழில்முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.அந்த மாநிலத்தில் 9 நாள்கள் பல்வேறு தொழிற்சாலைகளைப் பார்வையிட்டுத் திரும்பிய இக் குழுவினர் சேலத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:குஜராத் மாநிலத்தில் மின் தடை என்பது அறவே கிடையாது. அதேபோல் மாநிலம் முழுவதுக்கும் தரமான சீரான மின்சாரம் வழங்கப்படுகிறது. தொழிற்பேட்டைகளிலும், வெளியேயும் தொழிற்சாலைகள் தொடங்கும்போது அதற்குத் தேவையான மின் இணைப்பு, குடிநீர், கியாஸ் போன்ற இணைப்புகளை அரசே அமைத்துக் கொடுக்கிறது.தொழில் தொடங்க கடன் வழங்குவதற்கும், மானியம் வழங்குவதற்கும் எளிதான நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு அனைத்து சான்றிதழ்கள், அனுமதிகள், விவசாய நிலத்தில் தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்குதல் போன்ற பல்வேறு தேவைகள், விண்ணப்பம் பெறப்பட்ட 30 நாள்களில் செய்து கொடுக்க ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.÷இக் குழுவினர் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத், பரோடா, ராஜ்கோட், மோர்பி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். இதைத் தொடர்ந்து அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்து சேலம் மாவட்டத்தில் தொழில் வளம் பெருகுவதற்கான யுக்திகள் குறித்து பேசினர்.இதைத் தொடர்ந்து குஜராத் தலைமைச் செயலராகப் பணியாற்றும் சேலம் மாவட்டம் காடையாம்பட்டியைச் சேர்ந்த டி.ராஜகோபால், சென்னையைச் சேர்ந்த குஜராத் தொழிற்சாலைகள் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் தாரா ஐ.ஏ.எஸ்., சேலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் மற்றும் பல்வேறு அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினர்.அப்போது சேலம் மாவட்டத்தில் தக்காளி, மாம்பழம், மல்லிகைப் பூ போன்றவற்றை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் சிறு தொழிற்சாலைகள் அமைக்க உதவி செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததாக மாவட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் என்ஜினீயர் மாரியப்பன் தெரிவித்தார்.தொழிலதிபர்கள் ஈஸ்வரன், செந்தில்குமார், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
குறிச்சொற்கள்:
சேலத்தில் மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலை
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது
இதனைச் சார்ந்த பதிவுகள்