விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

மழை காலத்தில் பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு வேளாண்துறை 'டிப்ஸ்'

ஜெயங்கொண்டம்:மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பயிர் பாதுகாப்பு தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடியில் தற்போது நிலவிவரும் கால நிலையால் இரவில் குளிரும், பனியும் அதிக ஈரப்பதமும் (90 சதவீதத்துக்கு மேல்) வானம் மப்பும் மந்தாரமுமாயிருப்பதால் நெற்பயிரை பூஞ்சாண மற்றும் பாக்டீரியா நோய்கள் தாக்கி பயிர்களை அழிக்கின்றன. இவற்றில் முக்கியமானது குலைநோய், இலைப்புள்ளிநோய், பாக்ட்டீரியா இலைக்கருகல் நோய் மற்றும் ஆனைக்கொம்பன் பூச்சி தாக்குதல் ஆகியவைகளாகும். இந்நிலையில் மழைநீரை முடிந்தவரை வடிகட்ட வேண்டும். குலைநோய் இலை கிடைக்கணு மற்றும் கழுத்து கணுப்பகுதியை தாக்குகிறது. இலைகளின் மேல் நீள்வட்ட கண் வடிவ இலைப்புள்ளிகளை ஏற்படுத்தும். அதிகமான நோய் புள்ளிகள் தென்பட்டால் இலை மற்றும் இலை உறைகள் காய்ந்து விடும். இக்குலைநோயானது தகுந்த சூழ்நிலையில் மிக வேகமாக பரவி சேதத்தை விளைவிக்கிறது.


மேலும் பாக்ட்டீரியா ஏற்படுத்தும் இலைக்கருகல் நோயும் நெற்பயிரை இச்சமயத்தில் தாக்கி அழிக்கின்றன. தாக்கப்பட்ட இலைகளின் நுனிப் பகுதியிலிருந்து இரு ஓரங்களிலும் மஞ்சள் அல்லது வெளிரிய மஞ்சள் நிறப் புள்ளிகள் ஆரம்பமாகின்றன. பூக்கும் பருவத்தில் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். குலை நோயைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு ஆரம்பநிலையில் 400 கிராம் சூடோமோனாஸ் புளூரசென்ஸ் 3 முறை அல்லது நோய் பரவ ஆரம்பித்தால் ஹினோசான் 200 மில்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.பாக்ட்டீரியா இலைக்கருகல் நோயைக் கட்டுப்படுத்த ஸ்ட்ரெப்டோ சைக்ளின் 20 கிராம் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 500 கிராம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். ஆனைக்கொம்பன் தாக்குதலால் வெங்காய செடி குழல் நோய் உருவாகி வளர்ச்சி பாதிக்கும். இதற்காக கார்டாப் ஹைட்ரோகுளோரைடு குருணை 4 கிலோவை மணலுடன் கலந்து இடவும் அல்லது மானோகுரோட்டோபாஸ் 500 மில்லியை தெளிக்கவும். மேலும் நெற்பயிரில் துத்தநாகப் பற்றாக்குறையால் பயிர் பல இடங்களில் குருத்திலுள்ள தூர்கள் முழுவதம் வெளுத்து மஞ்சள் நிறமாக காணப்படும்.

இதை நிவர்த்தி செய்ய ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ துத்தநாக சல்பேட்டுடன் இரண்டு கிலோ யூரியாவை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். நெற்பயிரில் இலை மடக்குபுழு மற்றும் தண்டுப் புழுவும் மிக அதிக அளவில் இச்சமயத்தில் தாக்கி சேதம் உண்டாக்கும். இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த புரொப்பனபாஸ் 400 மில்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.நெல்வயலில் தேங்கி இருக்கும் தண்ணீரை வடித்துவிட்டு இந்த சமயத்தில் மேலுரமாக ஒரு ஏக்கருக்கு யூரியா 22 கிலோவும், பொட்டாஷ் 11 கிலோ இடவும். யூரியாவுடன் 5 கிலோவுக்கு ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு முதல் நாள் கலந்து வைத்திருந்து இட வேண்டும் என ஜெயங்கொண்டம் வேளாண் உதவி இயக்குனர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...