விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

அப்படியே சாப்பிடுவோம் /ஆடுகளும், மாடுகளும் சொல்கின்றன

எனக்கு நூடுல்ஸ் வேணும், பூஸ்ட் வேணும்...இப்படி குழந்தைகள் சொல்லும் போது நாம் வாங்கி கொடுத்து விடுவோம். நாம் வளர்க்கும் ஆடுகளும், மாடுகளும் இப்படி கேட்க முடியுமா? முடியாது. ஆனால், நமக்கு பலன் தரும் அந்த வாயில்லா பிராணிகளுக்கு தேவைப்படும் சத்து ஊட்டத்தை அவை கேட்கமுடியாத நிலையில் நாம் தரும் போது அவை மேலும் நமக்கு பலனை அளிக்கின்றன.
ஆனால் நமது வீட்டு குழந்தைகள் நன்றாக வளர போதிய சத்துக்களை தர வேண்டும் என்று ஆசைப்படும் நாம் நமக்கு பொருளதார வளத்தை அள்ளி தரும் விலங்குகளுக்கு போதிய சத்துள்ள தீவனத்தை தருவதில்லை என்பதே உண்மை.

 இந்த நிலையில், பூஸ்ட், காம்ப்ளான் போல், கால்நடைகளுக்கு அன்றாடம் தேவைப்படும் சத்துக்களை ஈடுகட்ட உதவும் புதிய வகையிலான கனிம சத்துக்கள் நிறைந்த கால்நடை நக்கி ஒன்றை கோவில்பட்டியை சேர்ந்த துவாரகன் உருவாக்கியுள்ளார். நிச்சயமாக இந்த கனிம கட்டி கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும், ஆடு, பன்றி வளர்ப்பு பண்ணைக்காரர்களுக்கும் பெரிய வரப்பிரசாதம் என்கிறார் அவர்.
இது என்ன கனிம கால்நடை நக்கி என்று அவரிடம் கேட்டோம். 

ஏதோ கிடைத்த தீவனத்தை உணவாக கொண்டு பசுக்கள் அன்றாடம் நமக்கு கொழுப்பும், இதர ஊட்டச்சசத்துக்களும் நிறைந்த பாலை தருகின்றன. இந்த பாலை அன்றாடம் காபியாக, டீயாக, நெய்யாக பல வகைகளில் பயன்படுத்துகிறோம். ரத்தத்தை பாலாக மாற்றி தரும் பசுக்களின் தீவனத்தில் போதிய சத்துக்கள் இருந்தால் தான் அவை தரும் பாலிலும் சரியான சத்துப் பொருட்கள் நிறைந்து காணப்படும். பாலில் இருக்கும் கொழுப்பின் அளவையும், இதர சத்தூட்ட பொருட்களின் அளவையும் வைத்து தான் அரசும், தனியார் பால் விற்பனை நிறுவனங்களும் பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் தருகின்றன.
இப்படி இருக்கும் நிலையில் பொதுவாக பசுக்களை பராமரிப்பவர்கள் அவற்றுக்கு போதிய சத்துள்ள தீவனம் கொடுத்து பராமரிக்கின்றார்களா, என்றால் இல்லை என்பது தான் உண்மை. குறிப்பாக நகரப்பகுதிகளில் பசுக்களை வளர்ப்பவர்கள் அவற்றை எந்த கவலையும் படாமல் விட்டு விடுவதுண்டு. அவை சுற்றுப்புறத்தில் இருக்கும் குப்பை கூளங்கள், சினிமா போஸ்டர்களை மேய்ந்து விட்டு தவறாமல் கறவை நேரத்திற்கு வீட்டுக்கு வந்து பாலை கொடுத்து விட்டு போய்விடும்ட.  இப்படி தெருவில் மேயச்செல்லும் போது தான் அவற்றுக்கு பிரச்சனை தொடங்குகிறது. குப்பையில் இருக்கும் பாலீத்தின் பைகள், ஆணி, பிளாஸ்டிக் என்று வித்தியாசம் பாராமல் அனைத்தையும் வயிற்றுக்குள் முழுங்கி விட்டு பின்னர் கழிச்சல்,தீவனம் எடுக்காமல் இறந்து போவது உள்பட நிகழும். சாதாரண தீவனத்திற்காக பசுக்களை இப்படி அலைய விடுபவர்கள் ஒட்டு மொத்தத்தில் பசுவை இழந்து விடுவதுண்டு.
இது தவிர, பண்ணை வைத்திருப்பவர்கள் கூட சாதாரண வைக்கோல், பிண்ணாக்கு, தவிடு ஆகியவற்றுடன் தீவனத்தை நிறுத்தி விடுகின்றனர். ஆனால் இதிலிருந்து அந்த பசுக்களுக்கு போதிய சத்துக்கள் கிடைக்குமா....என்றால் அதுவும் கேள்விக்குறி தான். இப்படி தீவனத்தில் போதிய சத்துக்கள் இல்லாத போது, கால்நடைகள் நோய்வாய்ப்படுகின்றன. பால் சுரப்பு குறைந்து போகின்றது. சினை பிடிப்பதில் தாமதம் அல்லது சினை பிடிக்காமலே போய் மலட்டு தன்மையை அடைகின்றன.
இது போன்ற பிரச்சனைகளை தவிர்த்து,  கால்நடைகளுக்கு அன்றாடம் தேவைப்படும் சத்துக்களை ஈடுகட்ட புதிய சத்துணவை கண்டு பிடிக்க தீவிரமாக ஆய்வு செய்ததில் இந்த கால்நடை நக்கி உருவானது. இது போன்ற கால்நடை கனிம நக்கி கட்டிகள் முதன்முதலாக ஜெர்மனி நாட்டில் பயன்படுத்தப்பட்டது. வழக்கமாக  கால்நடைகளுக்கு எந்த ஒரு தீவனத்தையும் கெட்டியாக அல்லது திரவவடிவில் அவை குடிக்கும் தண்ணீரில் கலந்து கொடுப்பதுண்டு. ஆனால் இந்த கட்டி வித்தியாசமானது. 2 கிலோ அளவில் திடமான ஒரு கட்டியாக இதனை செய்துள்ளோம். இதனை ஒரு குச்சியில் கோர்த்த நிலையில் பசுக்களின் முன் நட்டு வைத்து விடலாம். இந்த கட்டியை ஒன்றிரண்டு நாட்களில் பசுக்கள் சுவை பார்க்க கற்றுக் கொண்டு விடும். பார்ப்பதற்கு ஐஸ்கீரிம் போல் காட்சியளிக்கும் இந்த அமைப்பை மாடுகள் தேவையான நேரத்தில் சுவைக்க தொடங்கும். இதன் மூலம் இந்த கட்டியில் அடங்கியுள்ள தாதுஊட்ட சத்துக்களான, உப்பு, இரும்பு, துத்தநாகம், அயோடின், கோபால்ட், தாமிரம், மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு  போன்ற சத்துக்கள் பசுக்களுக்கு கிடைக்கும். ஆனால் வழக்கமாக நாம் தீவனம் வைக்கும் போது இந்த சத்துக்களை எல்லாம் கவனித்து கொடுப்பதில்லை. அதனால் தான் மேலே சொன்ன பிரச்சனைகள் எல்லாம் கால்நடைகளுக்கு வருவதுண்டு. ஆனால் இப்படி குச்சி போன்ற அமைப்பில் தாதுஉப்பு கட்டியை வைத்து விடுவதால், கால்நடைகள் இவற்றை தேவையான போது நக்கி உண்ண பழக்கப்பட்டு விடுகின்றன.
இதில் கிடைக்கும்  இரும்பு சத்து, கால்நடைகளின் ரத்தத்தில் சிவப்பு அணுக்களை அதிகரிக்க செய்கிறது. தாமிரச்சத்து கீமேகுளோபினை எடுத்து செல்கிறது. துத்தநாக சத்து உடலின் திசுக்களின் கண்ணறைகளை உருவாக்கவும், ரோமம், கம்பளி மற்றும் தோல் அதிக வளர்ச்சி பெறவும் உதவுகிறது. அயோடின் சத்து தொண்டை அழற்சி நோய் வராமல் தடுக்கிறது. உயிர்சத்தின் ரசாயன மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. மாங்கனீஸ் சத்து அதிக பால் சுரப்பதற்கும், கரு உருவாவதற்கும் உதவுகிறது. கோபாலட் சத்து, பசியின்மையை போக்குகிறது. இரத்த சோகையை நீக்குகிறது. மக்னீசியம் சத்து எலும்பு உருவாகிட உதவுகிறது.
பொதுவாக,  கால்நடைகளின் உணவில் இந்தசத்துக்கள் கிடைக்காத போது, அவை தொழுவத்தின் சுவர்களை நக்கும். மண்ணை  தின்னும். இதனால்  அவற்றின் உடல்வளர்ச்சி, வாழ்நாள் குறைந்து போகும்.  இந்த நிலையில் தாது உப்புக்களை ஒன்று கூட்டி, கட்டி போன்ற வடிவில் இதனை தயாரித்திருப்பதால் மாடுகளின் இயல்பான வழக்கமான நக்கி உண்ணும் பழக்கம் மேற்கண்ட  சத்துக்களை கிரகிக்க உதவுகிறது என்பது தான் இதில் சிறப்பு.
இந்த கனிம கால்நடை நக்கியை பால்சுரக்கும் மாடு, எருது, கன்றுக்குட்டிகள், ஆடு, பன்றி, குதிரை ஆகியவற்றுக்கு அதன் எடை அளவை பொறுத்து தரலாம். இந்த கட்டிகள் பண்ணையாளர்களின் மனத்துயரங்களை துடைக்கும் பஞ்சாக இருக்க போகிறது , என்கிறார் இவர்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...