விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

மாறும் விவசாயம்! பட்டுக்கூட்டில் கிடைத்தது லாபம் : கஷ்டப்பட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

மல்பெரி பயிரில் ஏக்கருக்கு 80 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்ததால், கோவை மாவட்டம் அன்னூர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆண்டுதோறும் குறைந்து வரும் மழை; கட்டுபடியாகாத விளைபொருள் விலை; அதிகரித்து வரும் உரம் மற்றும் பூச்சி மருந்து விலை; வேலைக்கு ஆட்கள் கிடைக்காதது; நிலத்தடி நீர் மட்டம் குறைவு, ஆகியவற்றால் கோவை புறநகரில் விவசாய பரப்பு குறைந்து வருகிறது. பல நூறு ஏக்கர் விவசாய நிலம் "லே-அவுட்'களாக அமைக்கப்பட்டு "சைட்' விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், மல்பெரி பயிர் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு, கோவை புறநகர் விவசாயிகளுக்கு லாபகரமாக உருவாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி மற்றும் அன்னூர் வட்டாரத்தில் அதிக அளவில் மல்பெரி பயிரிடப்படுகிறது. அடுத்தபடியாக, சுல்தான்பேட்டையில் பயிரிடப்படுகிறது. துவக்கத்தில் குறைவாக பயிரிடப்பட்ட மல்பெரி, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து, தற்போது அன்னூர் வட்டாரத்தில் மட்டும் 250 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. இதில், ஒரு ஏக்கருக்கு ஆண்டுக்கு செலவு போக 80 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அன்னூர் வட்டாரத்தில் அல்லப்பாளையம், பொன்னே கவுண்டன்புதூர், பெத்திகுட்டை, பிள்ளையப்பம்பாளையம், குமாரபாளையம் ஆகிய இடங்களில் மல்பெரி பயிரிடப்பட்டு பட்டுப்புழு வளர்க்கப்படுகிறது.
அன்னூர் பகுதி மல்பெரி விவசாயிகள் கூறியதாவது: வீ1, எம்.ஆர். 2 ஆகிய இரண்டு வீரிய ரக மல்பெரி அதிகம் பயிரிடப்படுகிறது. நாற்று முறையில் நடப்படும் மல்பெரியில் முதல் முறை 90 நாட்களுக்கு பின் இலைகளை பறிக்கலாம். அதன்பின், ஐம்பது நாட்களுக்கு ஒரு முறை இலைகளை பறிக்கலாம். ஒரு ஏக்கருக்கு 5,400 செடி நடலாம். மல்பெரி பயிரிட்டவுடன் பட்டுப்புழு வளர்ப்பு கூடம் தயார் செய்து கொள்ள வேண்டும். மல்பெரி பயிரிடும் போது மூன்று பிரிவுகளாக பிரித்து பயிரிட வேண்டும்.
இதன் மூலம், ஒவ்வொரு 25 நாட்களுக்கு ஒரு முறை இலைகளை பறித்து பட்டுப்புழுக்களுக்கு அளிக்க முடியும். பட்டுப்புழுக்கள் மல்பெரி இலைகளை உட்கொண்டு மூன்று வாரங்களில் பட்டுக்கூடு கட்டத்துவங்கி விடுகின்றன.
அதிலிருந்து, நான்கு நாட்களுக்கு பின் பட்டுக்கூடுகளை எடுத்து சுத்தப்படுத்தி கோவையிலுள்ள மாவட்ட பட்டுப்புழு வளர்ப்பு அங்காடியில் நடக்கும் ஏலத்தில் விற்கிறோம். எவ்வளவு பட்டுக்கூடு எடுத்துச்சென்றாலும் ஏலத்தில் விற்றுப்போகிறது.
ஒரு ஏக்கரில் மல்பெரி பயிரிட்டு, அந்த இலைகளை பட்டுப்புழுக்களுக்கு அளித்து, பட்டுக்கூடுகள் எடுத்து விற்பனை செய்வதன் மூலமாக, அனைத்து செலவுகளும் போக ஆண்டுக்கு 80 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இதனால், மேலும் பல விவசாயிகள் மல்பெரி பயிரிட ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
அல்லப்பாளையம் விவசாயி காளியப்பன் கூறியதாவது: வாழை மற்றும் மஞ்சளுக்கு தேவைப்படும் தண்ணீரில் பாதியளவு தண்ணீர் இருந்தாலே மல்பெரிக்கு போதுமானது. வாழை, கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை நடவு செய்த ஓராண்டு கழித்தே வருமானம் பார்க்க முடியும். ஆனால், மல்பெரியில் பட்டுக்கூடு விற்பனை மூலம் ஒவ்வொரு மாதமும் வருமானம் கிடைக்கிறது.
தற்போது, பட்டுக்கூடு கிலோ 185 ரூபாய்க்கு விற்பனையாகிறது. விலை மேலும் அதிகரித்தால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். நாளுக்கு நாள் பட்டுக்கூடுகளுக்கு தேவை அதிகரித்து வருகிறது. தண்ணீர் குறைவாக உள்ள விவசாயிகள், இந்த பயிர் மூலம் கூடுதல் வருமானம் பெறலாம்.
பட்டுவளர்ச்சித் துறையினர், மல்பெரி பயிரிட ஏக்கருக்கு 4,125 ரூபாய் மானியம் தருகின்றனர். பட்டுப்புழு கூடம் அமைக்க 50 ஆயிரம் ரூபாயும், சொட்டு நீர் பாசனம் அமைக்க ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாயும் மானியம் தருகின்றனர். மல்பெரியை ஒரு முறை நடவு செய்தால் 20 ஆண்டுக்கு பலன் தரும்.
களர் மண் தவிர மற்ற அனைத்து மண்ணிலும் நன்கு வளரும். மண் புழு உரம் உள்ளிட்ட இயற்கை உரம் பயன்படுத்தினால் விளைச்சல் மேலும் அதிகரிக்கும். சொட்டு நீர் பாசனம் உள்ளதால், களை வருவதில்லை. இதனால் களை எடுக்க, தண்ணீர் பாய்ச்ச ஆட்கள் தேவையில்லை. இவ்வாறு காளியப்பன் தெரிவித்தார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...