விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

பட்டுப்புழுக்களை தாக்கும் 'சுண்ணாம்பு கட்டி' நோய்

""குளிர்காலங்களில் பட்டுப்புழுக்களை தாக்கி, உற்பத்தியில் சேதம் ஏற்படுத்தும் சுண்ணாம்பு கட்டி நோயை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தடுக்க முடியும்', என உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் விஞ்ஞானி செல்வராஜ் பேசினார். உடுமலை மத்திய பட்டுவாரிய ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில் பட்டுக்கூடு உற்பத்தியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். பட்டுவாரிய விஞ்ஞானி செல்வராஜ் பேசியதாவது:

மழை மற்றும் குளிர்காலங்களில் சுண்ணாம்பு கட்டி நோய் பட்டுப்புழுக்களை தாக்கி சேதம் ஏற்படுத்துகிறது. உடுமலை பகுதியில் இந்த நோய்த்தாக்குதல் சில பகுதிகளில் துவங்கியுள்ளது. இந்தாண்டு பெய்த மழை காரணமாக அதிகரித்துள்ள ஈரப்பதம் இந்த நோய் பரவுவதற்கு ஏதுவாக உள்ளது. சுண்ணாம்பு கட்டி நோய் பெவேரியா பாஸியானா பூஞ்சையால் ஏற்படுகிறது. சுற்றுப்புறத்தில் நிலவும் அதிக ஈரப்பதம் மற்றும் 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வெப்பம் இந்த நோய் பரவுவதற்கு ஏற்ற சூழலாகும். இந்த நோய் தாக்கிய பட்டுப்புழுக்கள் முதலில் மந்தமாகி, பின்னர் இறந்து விடும். சில நேரங்களில் பிரவுன் கலந்த பிங்க் நிறத்திற்கு மாறும். இறந்த புழுக்கள் கெட்டியாகி, வெண்மை நிறத்தில் சாக்பீஸ் போல காணப்படும். இந்த நோய் காற்றின் மூலம் வேகமாக பரவும் தீவிர தொற்றுநோயாகும். இதனால், நோய் தடுப்பு முறைகளை உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். நோய் பரவுவதை தடுக்க, நோய் தாக்கிய புழுக்கள் சாக்பீஸ் போல கடினமாக மாறுவதற்குள் அவற்றை பொறுக்கி எடுக்க வேண்டும். தடுப்பு மருந்தான விஜேதா சப்ளிமெண்ட் கலவையை தூவி எரிக்கவும். நோய் கிருமிகள் மல்பெரி செடிகளை தாக்கும் இலை சுருட்டு புழு மற்றும் பீகார் கம்பளி புழுக்களிலும் நோயை தோற்றுவிக்கின்றன. எனவே மல்பெரி தோட்டத்தை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். புழு வளர்ப்பு மனை மற்றும் தளவாடங்களுக்கு நன்கு மருந்தடிக்க வேண்டும். சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும். மனையின் வெப்பம் 22 டிகிரி செல்சியஸ்க்கும் குறைவாக இருந் தால், வெப்பத்தை அதிகரிக்க வேண்டும். ஈரப்பதத்தை பராமரிக்க, தேவையான மல்பெரி இலைகளை மட்டும் உணவாக அளித்து விட்டு மீதமாகும் இலைகள் மற்றும் கழிவுகள் சேர்வதை தவிர்க்க வேண்டும். கடினமான புழுப்படுக்கையை தவிர்த்து நல்ல காற்றோட்ட வசதி ஏற்படுத்த வேண்டும். புழுக்கள் தோலுரிக்க செல்லும் போது நீர்த்த சுண்ணாம்பு தூளை தூவ வேண்டும். தோலுரிப்பிற்கு பிறகு விஜேதா சப்ளிமெண்ட்டை பரிந்துரை அடிப்படையில் தூவலாம்.
படுக்கை மருந்தை ஒரே சீராக ஒரு சதுர அடி படுக்கை பரப்பிற்கு 3 முதல் 5 கிராம் வீதம் தூவ வேண்டும். புழுக்கள் உணவு உண்ணும் பருவத்தில் தூவும் போது 4 ம் பருவத்தின் 3 வது நாள், 5 வது பருவத்தின் 2,3,4,5 மற்றும் 6 வது நாளில் புழுக்கள் எல்லா இலைகளையும் தின்ற பிறகே தூவ வேண்டும். இத்தகைய நோய் தடுப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் சுண்ணாம்பு கட்டி நோயில் இருந்து பட்டுப்புழுக்களை காப்பாற்றி, அதிக உற்பத்தி பெறலாம். இவ்வாறு, செல்வராஜ் பேசினார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...