விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

விதையில் கவனம்; மகசூல் பாதிக்கும் : சான்றளிப்பு இயக்குனர் எச்சரிக்கை"இனத்தூய்மை இல்லாத விதைகளால் மகசூல் பாதிக்கும்' என, விதைச்சான்றளிப்புத் துறை எச்சரித்துள்ளது.
அதன் இயக்குனர் கார்முகிலன் அறிக்கை: விவசாயத்தின் முக்கிய அம்சமே நல்ல மகசூல் பெறுவது தான். பயன்படுத்தப்படும் இடு பொருட்கள் தரமுள்ளதாக இருக்க வேண்டும். பல்வேறு இடுபொருட்கள் இருந்தாலும், விதை அடிப்படையிலான இடுபொருட்கள் முக்கியம்.
விதைகளை தேர்வு செய்கையில், சிறிது கவனக்குறைவாக இருந்தாலும், மகசூல் பாதிக்கும். எனவே, நல்ல பாரம்பரியமுள்ள சுத்தமான விதைகளை தேர்வு செய்ய வேண்டும். நல்ல விதை என்பது, தேவையான முளைப்புத்திறன்; அளவான ஈரப்பதம்; பாரம்பரிய சுத்தம்; பிற ரக கலப்பு இல்லாமை; பூச்சி நோய்தாக்குதல் இல்லாமை ஆகிய தன்மைகளை கொண்டிருக்க வேண்டும். விதையில் பாரம்பரிய சுத்தம் இல்லையென்றால் விளைச்சல் தரமாக இருக்காது.
பாரம்பரிய சுத்தம் இல்லாத விதைகளை விதைப்பதால், வயல்களில் பயர் உயரம் மாறுபட்டு இரண்டு அல்லது மூன்று அடுக்குகளில் விளையும்; வெவ்வேறு காலகட்டத்தில் பூக்கும். அதாவது, முதல் அடுக்கில் பயிர் பூக்கும் போது, இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு பயிர்கள் வளர்ச்சி பருவத்தில் இருக்கும். முதல் அடுக்கிலுள்ள பயிர் முதிர்ந்து உதிர்ந்துவிடும். இதனால், முதலில் முற்றிய பயிரை அறுவடை செய்ய இயலாது. ஒரே நேரத்தில் அறுவடை செய்வதும் சிரமம்.
மிகுந்த சிரமங்களுக்கிடையில் அறுவடை செய்தாலும், விதைகளின் நிறம், தன்மை மாறுபடுவதால், குறைந்த விலைக்கு விற்பனை செய்ய நேரிடும். சில நேரங்களில் மீண்டும் விதைப்புக்கு பயன்படுத்த, விதைகளை எடுத்து வைக்க முடியாது. சான்று விதை உற்பத்தியில் விதைச்சான்று அலுவலர்களால் விதை வயல்கள் ஆய்வு செய்யப்பட்டு வயல் தரம் பேணப்படுகிறது. இனத்தூய்மை பரிசோதனைக்கு விதை மாதிரி எடுக்கப்பட்டு, இனத்தூய்மை பரிசோதனை பண்ணையில் பயிரிடப்பட்டு, வல்லுநர்களால் நிர்ணயிக்கப்பட்ட குணாதிசயங்கள் மற்றும் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச இனத்தூய்மை சதவீதம் இருந்தால் மட்டுமே, சான்றளிப்புக்கு வரும் குவியலுக்கு சான்றட்டை வழங்கப்படுகிறது.
கடைகளில் விற்பனை செய்யப்படும் விதை குவியல்களில் இருந்து இனத்தூய்மை பரிசோதனைக்கு விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்படுகிறது. மத்திய அரசால், பயிர் ரகங்களுக்கு 98 சதவீதம், காம்போசிட், சிந்தடிக்ஸ் மல்டிலைன்ஸ் மற்றும் வீரிய ரகங்களுக்கு 95 சதவீதம், ஆமணக்கு வீரிய ரகத்துக்கு 85 சதவீதம், வீரிய பருத்தி, மஸ்க்மெலன், வீரிய கத்திரி, வீரிய தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு விதைகளுக்கு (டி.பி.எஸ்.,) 90 சதவீதம் என இனத்தூய்மைக்கான தரம் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் விதைகளை வாங்கும் போது, சான்றட்டை விபரங்களில் இனத்தூய்மை சதவீதம் குறிக்கப்பட்டுள்ளதா, என சரிபார்த்து வாங்க வேண்டும்.
இது குறித்த விவரங்களுக்கு, விதைச்சான்று இயக்குனர், 1424 - ஏ, தடாகம் சாலை, ஜி.சி.டி., போஸ்ட், கோவை, என்ற முகவரியை அணுகலாம் அல்லது 0422- 243 2984, 245 7554 என்ற டெலிபோன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, கார்முகிலன் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...