விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

எருமைக்கு 'குட் பை' : பராமரிப்பில் ஏகப்பட்ட சிக்கலாம்! பசு வளர்ப்புக்கு மாறும் விவசாயிகள்நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தீவன விலை, கட்டுபடியாகாத பால் கொள்முதல் விலை, பராமரிப்பில் ஏற்படும் சிரமங்கள் உள்ளிட்ட காரணங் களால், கோவை புறநகரில் எருமை வளர்ப்பு வெகுவாக குறைந்துவிட்டது.கோவையில், ஆண்டு தோறும் பருவமழை பொழிவு குறைந்து வருகிறது. வயலில் விதை விதைக்க, தண்ணீர் பாய்ச்ச, களை எடுக்க, அறுவடை செய்ய என விவசாய பணிக்கு போதுமான தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. உரம், பூச்சி மருந்து விலை உயர்ந்த அளவுக்கு, விளைபொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை கிடைப்பதில்லை. இதனால், பெரும்பாலான விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் கவனம் செலுத்துகின்றனர். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு, விவசாயிகளுக்கு முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. அன்னூர், கோவில்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பசு, எருமை கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. பால்காரர்கள் தோட்டத் துக்கு சென்று பால் கறந்து எடுத்துச் செல்கின்றனர். வாரம் ஒரு முறை அதற்கான பணத்தை விவசாயிகளுக்கு தருகின்றனர். சில விவசாயிகள், தாங்களே கறந்து ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கும், தனியார் பால் நிறுவனத்திற்கும் விற்கின்றனர்.கோவை புறநகரில், சமீப ஆண்டுகளாக எருமை வளர்ப்பு எண்ணிக்கை பல்வேறு காரணங்களால் குறைந்து வருகிறது. அன்னூர் வட்டாரத்தில் கடந்த 2005ல் 12 ஆயிரம் எருமைகள் வளர்க்கப்பட்டன; தற்போது இதன் எண்ணிக்கை 2,000மாக குறைந்து விட்டது. இதே போன்றே, மாவட்டத்தின் பிற கிராம புறங்களிலும் எருமை வளர்ப்பு குறைந்து வருகிறது. இது குறித்து, சாளையூரைச் சேர்ந்த விவசாயி திருமூர்த்தி கூறியதாவது: சாளையூரில் கராச்சி இன எருமை வளர்க்கப்படுகிறது. பசு மாடுகள் தினமும் சராசரியாக 15 லி.,வரை பால் தருகின்றன. ஆனால், எருமைகள் எட்டு முதல் 10 லி.,வரை மட்டுமே கறக்கின்றன. தோட்டத்தில் எருமைகளுக்காக விளைவிக்கப்படும் சோளத்தட்டை வெட்டி, அடுக்க தினக்கூலியாக 300 ரூபாய் தர வேண்டி உள்ளது. வெளியில் வாங்கும் தீவனங்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. எருமை சினை பிடிக்க ஜோடி கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கிறது. ஒரு சினை ஊசிக்கு 100 ரூபாய் கட்டணம் தர வேண்டியுள்ளது. ஆனாலும், எளிதில் சினை பிடிப்பதில்லை.குடும்பத்தில் ஏதாவது பிரச்னை அல்லது நல்ல விஷயங்களுக்கு ஜோதிடரிடம் சென்றால், "வீட்டில் கறுப்பு ஆகாது' என்று கூறுகின்றனர். எருமைகளை வெயிலில் கட்டி வைத்து பராமரிக்க முடியாது. பச்சைத் தீவனம் தர வேண்டியுள்ளது. காய்ந்த தீவனம் தர முடியாது. பசு மாடு சினை பிடித்தால் ஏழு மாதம் வரை பால் கறக்க முடியும். ஆனால், எருமை மாடு சினை பிடித்தால் மூன்று மாதம் வரை மட்டுமே பால் கறக்க முடியும். மேலும் கன்றுக்குட்டி இல்லாமல் எருமையிடம் பால் கறப்பது மிகவும் சிரமம். பசு மாட்டை விட எருமை அதிக தீவனம் சாப்பிடுகிறது.மேலும், இதற்கான மேய்ச்சல் நிலப்பரப்பும் குறைந்து விட்டது. பால் கொள்முதல் விலை செலவுக்கேற்ப உயரவில்லை. இதனால், மூன்று ஆண்டுகளில் அன்னூர் பகுதியில் இருந்த 12 ஆயிரம் எருமைகள் வெறும் 2,000 ஆக குறைந்து விட்டது. எருமைக்கு பதிலாக பசு மாடு வளர்க்க பலரும் மாறிவிட்டனர்.நூற்றுக்கணக்கான விவசாயிகள் தாங்கள் வளர்த்து வந்த எருமைகளை வியாபாரிகளிடம் கேரளா கொண்டு செல்ல விற்று விட்டனர். எருமை வளர்ப்பு இதனால் குறைந்து விட்டது. இவ்வாறு, திருமூர்த்தி தெரிவித்தார்."ஆவின்' பால் சொசைட்டி நிர்வாகிகள் கூறுகையில், "கடந்த சில ஆண்டுகளாக எருமைப்பால் வரத்து மிகவும் குறைந்து விட்டது. 50 சதவீத சொசைட்டிகளில் ஒரு லிட்டர் கூட எருமைப்பால் வரத்து இல்லை' என்றனர்.எருமை வளர்ப்பு குறைந்ததால் சாணத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. இதனால், மானியம் மூலம் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் அமைத்த சாண எரிவாயு கலன் பல இடங்களில் பயன்படுத்தாமல் துருப்பிடித்து கிடக்கிறது. கிராமப்புற பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமான கால்நடை வளர்ப்பு தொழில் தொய்வடையாமல் இருக்க, பருத்திக்கொட்டை, புண்ணாக்கு உள்ளிட்ட கால்நடைகளுக்கான ஜீவாதார தீவனங்களின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...